செய்திகள்

அயோத்தி விவகாரம் - அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published On 2018-09-27 09:43 GMT   |   Update On 2018-09-27 09:43 GMT
அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பான மறுஆய்வு விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. #AyodhyaMatter #IsmailFaruquiCase #SupremeCourt
புதுடெல்லி:

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது.

கடந்த 1950-ஆம் ஆண்டில் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த கோபால் சிங் என்பவர் அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி முதன்முதலாக மனுதாக்கல் செய்தார். அதேபோன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் சித்திக் என்பவரும் மனு தாக்கல் செய்தார். மனுதாரர்கள் இருவருமே இறந்துவிட்ட நிலையிலும், அதுதொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது.
 
இதனிடையே, ராமஜென்ம பூமி தொடர்பாக எம்.இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 1994-இல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மசூதிகள் முஸ்லிம் மதத்துடன் ஒருங்கிணைந்த இடங்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் மூலம் மறுஆய்வு செய்யக் கோரி முஸ்லிம்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது.



அப்போது, மசூதிகள் இஸ்லாம் மதத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்டதல்ல என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விவகாரத்தை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி அசோக் பூஷன் ஆகியோர் மறுத்துவிட்டனர். 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வே சர்ச்சைக்குரிய அயோத்தி இட விவகாரம் குறித்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் எனவும் தெரிவித்தனர்.

இந்த மனுக்கள் விசாரணைக்கு தகுதியானதா? என்பதை முடிவு செய்வதற்கான விசாரணை அக்டோபர் 29-ம் தேதி தொடங்கும் என்றும் அறிவுறுத்தினர்.

அத்தியாவசிய மத நடைமுறையை பொருத்தவரை மிகப்பெரிய அமர்வுதான் முடிவு செய்ய வேண்டும் என மற்றொரு நீதிபதி நசீர் தெரிவித்தார். #AyodhyaMatter #IsmailFaruquiCase #SupremeCourt
 
Tags:    

Similar News