செய்திகள்

ஆதார் அட்டையால் ரூ.90 ஆயிரம் கோடி மிச்சம் - சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு அருண் ஜெட்லி வரவேற்பு

Published On 2018-09-26 10:56 GMT   |   Update On 2018-09-26 10:56 GMT
ஆதார் அடையாள அட்டை செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ள நிதி மந்திரி அருண் ஜெட்லி, “ஆதார் அட்டையால் 90 ஆயிரம் கோடி ரூபாயை அரசு சேமித்துள்ளது’’ என தெரிவித்துள்ளார். #AadhaarVerdict #ArunJaitley
புதுடெல்லி:

ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம், அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம், செல்போன் நம்பர் மற்றும் வங்கி சேவையை பெற ஆதார் கட்டாயம் ஆகியவை தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கல்வின்கர், ஏகே சிக்ரி, அஷோக் பூஷன், சந்த்ரசூட் ஆகியோர் அமர்வு இன்று மிக முக்கியமான இந்த தீர்ப்பை வழங்கியது. 

ஆதார் அட்டை சட்ட அங்கீகாரம் கொண்டது எனவும், அரசின் சேவைகளை பெற ஆதார் கட்டாயம் எனவும் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். எனினும், வங்கிக்கணக்கு, செல்போன் எண், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரி சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை எனவும் தீர்ப்பு வழங்கினர்.

நீதிபதி சந்திரசூட் மட்டும் ஆதார் அட்டைக்கு எதிரான தீர்ப்பை வழங்கினார். எனினும், 4 நீதிபதிகள் மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளதால் அந்த தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். 

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ள மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, “சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆதார் அட்டையால் அரசுக்கு சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது” என தெரிவித்துள்ளார். 

மேலும், மத்திய மந்திரிகள் ரவி சங்கர்  பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். 
Tags:    

Similar News