செய்திகள்

திருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

Published On 2018-09-22 05:47 GMT   |   Update On 2018-09-22 05:47 GMT
திருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தேவஸ்தானம் புரட்டாசி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது. #TirupatiTemple
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது.



இந்த விழாவில் 5 லட்சத்து 90 ஆயிரத்து 584 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விரதம் இருந்து பாத யாத்திரையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடைபாதை வழியாக வந்தனர்.

இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரமானது. ரூ.300 கட்டண தரிசனத்தில் 8 மணி நேரமும் நடைபாதை மற்றும் டைம் ஸ்லாட் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 27 குடோன்களும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தேவஸ்தானம் புரட்டாசி மாதத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது.

அதன்படி இன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும் வருகிற 23, 29, 30 மற்றும் அக்டோபர் 6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. #TirupatiTemple

Tags:    

Similar News