செய்திகள்

ரபேல் ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் இழைத்துவிட்டார் - ராகுல் காந்தி தாக்கு

Published On 2018-09-22 01:46 GMT   |   Update On 2018-09-22 01:46 GMT
ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார். #Rafaledeal #rahulgandhi #pmmodi #FrancoisHollande
புதுடெல்லி :

பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு சாதமாக செயல்பட்ட ரகசியத்தை வெளியிட்டதற்காக பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக,  ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, ரபேல் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். ஹலாண்டேவிற்கு நன்றி, பிரதமர் தனிப்பட்ட முறையில் ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தை அம்பானிக்கு வழங்கியுள்ளார் என்பது இப்போது எங்களுக்கு தெரிந்துவிட்டது. பிரதமர், இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார். இந்திய ராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு பிரதமர் அவமரியாதை செய்துள்ளார்.’ என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #Rafaledeal #rahulgandhi #pmmodi  #FrancoisHollande
Tags:    

Similar News