செய்திகள்

சரயு நதிக்கரையில் பிரமாண்ட ராமர் சிலை - தீபாவளியில் திறக்க யோகி ஆதித்யநாத் திட்டம்

Published On 2018-09-14 00:10 GMT   |   Update On 2018-09-14 00:10 GMT
உத்தரப்பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் அமைக்கப்படவுள்ள பிரமாண்டமான ராமர் சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளியில் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளார். #Ayodhya #LordRamarStatue #YogiAdityanath
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்து இருந்த பிரச்சினைக்கு உரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு இன்னும் இறுதி முடிவு ஏற்படவில்லை. இது தொடர்பான வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் இழுபறி நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உ.பி.யின் சரயு நதிக்கரையில் அமைக்கப்படவுள்ள பிரமாண்ட ராமர் சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ளார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், அயோத்தியில் சரயு நதிக்கரையில் மிக பிரமாண்டமாக 107 மீட்டர் உயரத்தில் (351 அடி) ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை 44 மீட்டர் (144 அடி) உயரம் உள்ள பீடத்தில் வைக்கப்படுகிறது. ஆக சிலை, பீடம் இரண்டும் சேர்ந்து மொத்த உயரம் 151 மீட்டர் (495 அடி) ஆகும்.



இந்த சிலையை சரயு நதிக்கரையில் சரியாக எந்த இடத்தில் வைப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ராமர் சிலை வெண்கலத்தில், டெல்லியை அடுத்த நொய்டாவை சேர்ந்த சிற்பியால் உருவாக்கப்படுகிறது. இந்த சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளி பண்டிகையின்போது திறந்து வைக்கிறார்.

சிலை வைக்கப்படுகிற இடத்தையொட்டி, அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஒரு கலைக்கூடமும், கலை அரங்கமும் இடம் பெற்றிருக்கும்.

அருங்காட்சியகம், கலைக்கூடத்தில் ராமபிரானின் ஒட்டுமொத்த வாழ்வு சம்பவங்களை விவரிக்கும் காட்சிகள் இடம் பெறும். கலையரங்கைப் பொறுத்தமட்டில் நாட்டின் பல்வேறு அமைப்புகளும் ‘ராம்லீலா’வை அரங்கேற்றுவதற்கு வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். கலையரங்கில் ‘லேசர்’ படக்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். #Ayodhya #LordRamarStatue #YogiAdityanath
Tags:    

Similar News