செய்திகள்

அடுத்து வரும் அரசு மேல்முறையீடு செய்யும் - 377 வழக்கு தீர்ப்பு பற்றி சுப்பிரமணியன் சாமி கருத்து

Published On 2018-09-06 15:04 GMT   |   Update On 2018-09-06 15:22 GMT
ஓரின சேர்க்கை குற்றமில்லை என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்பிரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார். #Section377 #SubramanianSwamy
புதுடெல்லி:

ஓரின சேர்க்கை குற்றமில்லை என 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

‘சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு இறுதியானது கிடையாது. அடுத்து அமையும் அரசு 7-பேர் கொண்ட அரசியல்சாசன அமர்விடம் இந்த வழக்கை எடுத்து செல்லும். ஓரின சேர்க்கை குற்றமில்லை என்ற தீர்ப்பினால், சமூகத்தில் இனிமேல் குற்றங்கள் அதிகரிக்கும். பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும்.

ஓரின சேர்க்கை என்பது என்னை பொறுத்தவரை மரபணு ரீதியிலான ஒரு குறைபாடாகும். இதுபோன்ற பாதிப்பை கொண்டவர்களை இயல்பான பாலுறவு வைத்துக்கொள்ளும் மனிதர்களுடன் ஒப்பிடக்கூடாது, ஒப்பிடவும் முடியாது. இது இந்திய கலாச்சாரம் கிடையாது. அமெரிக்க கலாச்சாரமாகும். இதற்கு பின்னால் கோடிக்கணக்கான பணம் புழங்குகிறது.  

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் ஓரின சேர்க்கை பார்களை உருவாக்க நினைக்கின்றன. இதனால் நாட்டின் பாரம்பரியம் சீரழியும். நாட்டின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். இது இந்துத்துவ கொள்கைக்கு எதிரானது, நம்முடைய பழங்கால முறைக்கும், பழக்கத்துக்கும் எதிரானது’ என கூறியுள்ளார். #Section377 #SubramanianSwamy
Tags:    

Similar News