செய்திகள்

கொல்கத்தா மேம்பால விபத்து துரதிஷ்டவசமானது - பிரதமர் மோடி

Published On 2018-09-04 13:45 GMT   |   Update On 2018-09-04 13:45 GMT
கொல்கத்தாவில் மேஜெர்ஹர் மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். #kolkatabridgecollapse
புதுடெல்லி:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மேஜெர்ஹட் என்ற மேம்பாலத்தின் ஒருபகுதி இன்று மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த பின் பேசிய மந்திரி ஃபிர்ஹத் ஹக்கீம், இந்த மேம்பாலம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும், தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து பகுதியில் இருந்து 6 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில், டார்ஜிலிங்கில் இருக்கும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளம் திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், மீட்பு பணிகளை கண்காணித்து வருவதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த மேம்பால விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‘கொல்கத்தாவில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது மிகவும் துரதிஷ்டவசமானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் இறைவனை வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #kolkatabridgecollapse
Tags:    

Similar News