செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளை படத்தில் காணலாம்.

கேரளாவுக்கு கடத்தி சென்ற ரூ.6 கோடி மதிப்பிலான போதை பொருளுடன் 4 பேர் கைது

Published On 2018-09-04 06:23 GMT   |   Update On 2018-09-04 06:23 GMT
கேரள மாநிலம் அட்டக்குளம் பகுதியில் வாகனச் சோதனையின்போது கேரளாவுக்கு கடத்திவரப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். #Drugsseized
திருவனந்தபுரம்:

கேரளாவிற்கு அடிக்கடி போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, கேரளாவின் மலையோர கிராமங்களான அட்டப்பாடி, இடுக்கி பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், கஞ்சா கடத்தி வந்த கும்பல் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அட்டக்குளம் வழியாக ஒரு கும்பல் போதைபொருட்கள் கடத்தி வர இருக்கும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தினர். இதற்காக நடந்த வாகனச் சோதனையின்போது அட்டக்குளம் பகுதியில் காரில் வந்த 4 பேர் சிக்கினர்.

அவர்களிடம் சோதனை செய்தபோது 6.400 கிராம் எடையுள்ள ஹாஷிஷ் என்ற போதை பொருள் சிக்கியது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.6 கோடியாகும். கேரளா வழியாக இதனை மாலத்தீவிற்கு கடத்திச் செல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த கும்பலில் இருந்த இடுக்கியைச் சேர்ந்த தங்கமணி, பினோய் தோமஸ், கோபி மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்டனி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களுக்கு போதை பொருளை சப்ளை செய்தவர்கள் யார்? யாருக்காக கடத்தி வரப்பட்டது? இவர்களுக்கு பின்னணியில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் உள்ளனரா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.  #Drugsseized

Tags:    

Similar News