செய்திகள்

கர்ப்பிணி மனைவி சிகிச்சைக்கு 4 வயது சிறுமியை விற்ற தந்தை

Published On 2018-08-31 10:16 GMT   |   Update On 2018-08-31 10:16 GMT
உத்தரபிரதேசம் மாநிலம் கன்னாஜ் என்ற இடத்தில் மனைவியின் பிரசவ செலவுக்காக, பெற்ற குழந்தையை, தந்தை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #pregnantwife #Kannauj
கன்னாஜ்:

உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பஞ்சாரா. சாதாரண கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுக்தேவி. இவர்களுக்கு 4 வயதில் ரோஷ்னி என்ற மகளும், 1 வயதில் ஜானு என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சுக்தேவி மீண்டும் கர்ப்பமானாள். 7 மாத கர்ப்பிணியாக இருந்த சுக்தேவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்று சேர்க்க முயன்றார். கட்டணம் அதிகம் கேட்டதால் சேர்க்காமல் கடைசியில் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சுக்தேவிக்கு ரத்தம் செலுத்த வேண்டும், ரத்தம் செலுத்தினால்தான் உயிர் பிழைப்பாள், வெளியில் ரத்த வங்கியில் போய் வாங்கி வாருங்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

ரத்த வங்கிக்கு வந்த அரவிந்த் டாக்டர்கள் குறிப்பிட்ட ரத்தத்தை கேட்ட போது அதற்கு கட்டணமாக ஆயிரக்கணக்கில் பணம் கேட்டனர். அந்த அளவுக்கு பணம் இல்லை.



இதனால் தவித்த அவர் மனைவி உயிரை காப்பாற்ற தனது 4 வயது சிறுமி ரோஷ்னியை விற்க முடிவு செய்தார். அங்குள்ள ஒருவரிடம் விற்று அந்தப் பணத்தின் மூலம் ரத்தம் வாங்கி ஆஸ்பத்திரிக்கு ஓடினார். அதன் பிறகு ரத்தம் செலுத்தப்பட்டு சுக்தேவி உயிர் பிழைத்தார்.

இதுபற்றி அரவிந்த் கூறுகையில், மனைவி உயிரை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார். தாய் சுக்தேவி கூறும் போது, குழந்தையை விற்க மனம் இல்லை. எங்களுக்கு வேறு வழியில்லை, பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் பணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர் என்றார். #pregnantwife #Kannauj
Tags:    

Similar News