செய்திகள்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மர கட்டை கடத்தல் - 2 பேர் கைது

Published On 2018-08-30 11:14 IST   |   Update On 2018-08-30 11:14:00 IST
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். #RedSandalwood
நகரி:

ஆந்திர மாநிலம் நாராயணவரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகள் லாரியில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆந்திர மாநில தனிப்படை போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு லட்சுமி நாராயணன் தலைமையில், போலீசார் செம்மர கட்டை கடத்தல் லாரியை பிடிக்க வியூகம் வகுத்தனர். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் அசோக்குமார், நகரியில் கடத்தல் லாரியை போலீஸ் படையுடன் மடக்கிப் பிடித்தார்.

செம்மர கட்டைகளுடன் வந்த இந்த லாரியின் முன்புறம் கர்நாடக மாநில வாகன பதிவு எண்ணும், பின்னால் கேரள மாநில பதிவு எண்ணும் இருந்தது. போலீசார் லாரியை நிறுத்தியதும் அதில் இருந்த 8 பேர் இறங்கி ஓடினார்கள்.

அதில் 2 பேரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்களில் ஒருவர் லாரி டிரைவர். இவருடைய பெயர் பன்னி. இவர் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

போலீசாரிடம் சிக்கிய இன்னொருவர் பாலவர்தன் ரெட்டி. இவர், ஜவ்வாது மலை பகுதியில் செம்மர கட்டைகளை வெட்ட ஆட்களை ஏற்பாடு செய்பவர் என்று தெரிய வந்துள்ளது. இவர்களை இன்ஸ்பெக்டர் அசோக்குமார், நகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி ஆகியோர் கைது செய்தனர். ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. #RedSandalwood

Tags:    

Similar News