செய்திகள்

ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி அரசில் பிளவு ஏற்படாது - டி.கே.சிவகுமார் பேட்டி

Published On 2018-08-27 05:36 GMT   |   Update On 2018-08-27 06:43 GMT
ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசில் பிளவு ஏற்படாது என்று கர்நாடக மந்திரி டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Congress #JDS #DKShivakumar

பெங்களூரு:

கர்நாடக நீர்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அரசியல் சாசத்துக்குட்பட்டு ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் ஆட்சியை பிடிக்க முடியாத பாரதிய ஜனதா கட்சியினர் இந்த ஆட்சியை கவிழ்க்க தேவையான நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் கூட்டணி ஆட்சி இரும்புக்குடமாகும். இது எங்கிருந்து விழுந்தாலும் உடையாது. ஆனால் பாரதிய ஜனதாவினர் எங்கள் ஆட்சியையும், கூட்டணியையும் மண் குடம் என்று கருதி வருகின்றனர்.

கர்நாடக சட்டப் பேரவையில் பாரதிய ஜனதா பலம் 104 ஆக உள்ளது. அவர்கள் அறுதி பெரும்பான்மை பெற வேண்டும் என்றால், அவர்களின் பலத்தை 113 ஆக உயர்த்த வேண்டும். இதற்கான முன்பு போல ‘ஆபரேசன் கமலா’ திட்டத்தை பின்பற்ற பாரதிய ஜனதா முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த முறை ஆபரேசன் கமலா திட்டத்தை அவர்கள் பின்பற்றிய போது நாங்கள் அலட்சியமாக இருந்து விட்டோம். அப்போது பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்களையும் பாரதிய ஜனதா கட்சியினர் பின்னர் கைவிட்ட கதையை நாடு அறியும்.

தற்போது சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அதிகம் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஜே.டி.எஸ். கட்சியினர் எம்.எல்.ஏ.க்களை இழுப்பது என்பது முடியாத காரியம். எனவே ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டணியிலும் பிளவு ஏற்படாது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி ஆட்சி நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News