செய்திகள்

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் நிலச்சரிவு - வெள்ளத்தில் 20 பேர் பலி

Published On 2018-08-26 06:19 GMT   |   Update On 2018-08-26 06:19 GMT
கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டியுள்ள குடகு மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. #KodaguFloods
மைசூர்:

கடந்த ஒரு மாதமாக கேரளாவிலும் கர்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்தது. கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய மழை கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள குடகு, உடுப்பி, மைசூர் மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் புதைந்தன. அதில் வசித்த மக்கள் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

தேசிய பேரிடர் மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. அவர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள். நேற்று மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் குடகு மாவட்டத்தில் வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட்டார். அவரது சுற்றுப்பயண திட்டத்தை முறையாக வகுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவருக்கும் மாநில சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவில் வைரலாக பரவியுள்ளது.

நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயண திட்டத்தை மாவட்ட நிர்வாகம் தான் தயாரித்தது. ஆனால் நிர்மலா சீதாராமன் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து இருப்பது அவமானப்படுத்தும் செயல் என்று மாநில அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #KodaguFloods
Tags:    

Similar News