செய்திகள்

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்

Published On 2018-08-19 06:32 GMT   |   Update On 2018-08-19 06:32 GMT
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை அவரது மகள் அனிதா போஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். #Netaji #Netajidaughter
புதுடெல்லி:

இந்திய தேசிய ராணுவம் என்ற போராளிகள் பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர் அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மனி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார்.

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, கோளாறு காரணமாக அந்த விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக கருதப்படுகிறது.

நேதாஜியின் அஸ்தி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள ரென்கோஜி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது நேதாஜியின் அஸ்தி தானா? என்பதை இந்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத நிலையில் நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு அவரது மகள் அனிதா போஸ் பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.

நேதாஜி, கணவருடன் அனிதா போஸ்.

இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்ததாக நம்பப்படும் நேதாஜியின் 73-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேதாஜியின் மகள் அனிதா போஸ், ‘தாய்நாடான இந்தியாவுக்குவர வேண்டும் என என்னுடைய தந்தை மிகவும் ஆசைப்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது ஆசை நிறைவேறாமல் போனது.

எனினும், சுதந்திர இந்தியாவை அவரது அஸ்தியாவது தொட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவரது ஆசை பூர்த்தி அடையும். மிக தீவிரமான இந்து பக்தராக இருந்த அவரது உடலின் மிச்சத்தை கங்கை ஆற்றில் கரைக்க வேண்டியது அவசியம்.

எனவே, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்ற எனது பழைய கோரிக்கையை அவரது 73-வது நினைவு தினமான இன்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்’ என குறிப்பிட்டார். #Netaji #Netajidaughter #Netajimortalremains
Tags:    

Similar News