செய்திகள்

குடகு மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு: குமாரசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

Published On 2018-08-18 02:03 GMT   |   Update On 2018-08-18 02:03 GMT
குடகு மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து குமாரசாமி தலைமையில் இன்று(சனிக்கிழமை) உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. #KarnatakaRains
பெங்களூரு :

குடகு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் இயற்கை பேரிடர் குழு மற்றும் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை செயலாளர் விஜயபாஸ்கருடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதுபற்றி குமாரசாமி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க ராணுவத்தினர், இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தி விவரங்களை கேட்டு பெற்றேன். மைசூரு, மண்டியா, ராமநகர், ஹாசன் மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் குடகிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

நிவாரண முகாம்களில் தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 200 தன்னார்வ தொண்டர்கள் குடகு மாவட்டத்திற்கு மைசூருவில் இருந்து செல்கிறார்கள். மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, எச்.டி.ரேவண்ணா, சா.ரா.மகேஷ் ஆகியோர் குடகிலேயே தங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குடகு மாவட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து எனது தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நாளை(அதாவது இன்று) காலை 11.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KarnatakaRains
Tags:    

Similar News