செய்திகள்

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி

Published On 2018-08-17 04:46 GMT   |   Update On 2018-08-17 04:46 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அவரது வீட்டில் இருந்து பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. #AtalBihariVajpayee #RIPVajpayee
புதுடெல்லி:

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) நேற்று டெல்லியில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான அவரது மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.

வாஜ்பாயின் உடல் டெல்லி கிருஷ்ணாமேனன் பார்க்கில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்வர் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்த அரசியல் தலைவர்கள் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.



காலை 10 மணியளவில் வாஜ்பாய் உடல் அவரது வீட்டில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என சுமார் 60 ஆயிரம் பேர் கட்சி அலுவலகத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தில் இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்பின்னர் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.

வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழக அரசு சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.  #AtalBihariVajpayee #RIPVajpayee 
Tags:    

Similar News