செய்திகள்

கேரளாவில் தொடரும் சோகம் - வீட்டின் மீது மலை சரிந்து 7 பேர் பலி

Published On 2018-08-16 07:29 GMT   |   Update On 2018-08-16 07:29 GMT
கேரளாவின் கொழிஞ்சாம்பாறையில் கோழிக்குஞ்சுக்களை காப்பற்ற முயன்ற போது வீட்டின் மீது மலை சரிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொழிஞ்சாம்பாறை:

கேரளாவில் கடந்த 8-ந்தேதி தொடங்கிய கனமழை தீவிரம் குறையாமல் தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழக- கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணை நிரம்பியது. இதனையடுத்து 450 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் கல்பாத்தி புழா, சித்தூர் புழா வழியாக பாரதப்புழா ஆற்றில் கலக்கிறது. இதனால் பாரதபுழா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 34 பேர் மழைக்கு பலியானார்கள்.

இந்நிலையில் மலப்புரம் மாவட்டம் பெரிங்கிளாவ் என்ற இடத்தில் உள்ள மலை அடிவாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இருந்தனர். அப்பகுதி மக்கள் மலைசரிந்து விழ வாய்ப்புள்ளது. பாதுகாப்பான பகுதிக்கு வரும்படி அழைத்தனர். அதன்படி 4 பேரும் பாதுகாப்பான பகுதிக்கு சென்றனர்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து கோழிக்குஞ்சுகளுக்கு ஆபத்து நேரிடும் என்று நினைத்த 4 பேரும் மீண்டும் வீட்டிற்கு சென்றனர். அங்கு கோழிக்குஞ்சுகளை மீட்டபோது மலைசரிந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் சிக்கினர்.

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓடிச்சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். அப்போது பொதுமக்களில் 3 பேரும் மற்றொரு மலைசரிவில் சிக்கினர்.

இது குறித்து பேரிடர்மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக மீட்க முடியாததால் மலைசரிவில் சிக்கிய 8 பேரும் இறந்து விட்டதாக அறிவித்தனர். அவர்களின் பெயர் விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

தொடர் மழையால் கொச்சி விமான நிலையம் தண்ணீரில் மூழ்கியது. விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் வெள்ளம் புகுந்ததால் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. தொடர் கனமழையால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. #KeralaFloods2018
Tags:    

Similar News