செய்திகள்

பாலியல் வழக்கில் சிக்கிய தொண்டு நிறுவனத்தின் மற்றொரு இல்லத்தில் 11 பெண்கள் மாயம்

Published On 2018-07-31 10:53 GMT   |   Update On 2018-07-31 10:53 GMT
பீகார் மாநிலத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய தொண்டு நிறுவனம் நடத்தி வரும் மற்றொரு காப்பகத்தில் தங்கியிருந்த 11 பெண்களைக் காணவில்லை. #BiharWomenMissing #MuzaffarpurShelterHome
முசாபர்பூர்:

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மாநில அரசு உதவி பெறும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 4 வயது முதல் 18 வயது வரையுள்ள பேச்சு குறைபாடு கொண்ட 44 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த சிறுமிகளில் பலரை இல்லத்தின் உரிமையாளரும், பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக மும்பையைச் சேர்ந்த டாடா சமூக அறிவியல் நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய தணிக்கையின் போது அறிக்கையாக வெளியிட்டது. இது தொடர்பாக முசாபர்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதுகாப்பு இல்லத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாகூரை கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரிஜேஷ் தாகூரின் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்த 11 பெண்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்து பிரிஜேஷ் தாகூர் மீது முசாபர்பூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பீகார் அரசின்  சமூக நலத்துறை உதவி இயக்குனர் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


குழந்தைகள் காப்பக விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், இந்த மகளிர் காப்பகத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, 11 பெண்கள் மாயமானது தெரியவந்துள்ளது. காணாமல் போன  பெண்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். #BiharWomenMissing #MuzaffarpurShelterHome

Tags:    

Similar News