செய்திகள்

டிராய் தலைவரின் தனிப்பட்ட விவரங்கள் எங்கள் இணையத்தில் ஊடுருவப்பட்டதல்ல - ஆதார் முகமை விளக்கம்

Published On 2018-07-29 13:30 GMT   |   Update On 2018-07-29 13:30 GMT
ஆதார் எண் மூலம் டிராய் தலைவரின் தகவல்கள் திருடப்பட்டதாக வெளிவந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள ஆதார் முகமை, அவரது தகவல்கள் ஆதாரின் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதல்ல என தெரிவித்துள்ளது. #Aadhaar #UIDAI
புதுடெல்லி:

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் எனும் தனிநபர் அடையாள அட்டை பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. தனிநபரின் தகவல்கள் திருடப்படுவதாகவும், பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

அதே சமயம் ஆதார் தகவல்களை திருட முடியாது எனவும், பலகட்ட பாதுகாப்புகள் போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஆதார் முகமை தனது சார்பில் விளக்கத்தை அளித்து வருகிறது.

இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஆதார் ஆணையத்தின் முன்னாள் பொதுமேலாளருமான ஆர்.எஸ் ஷர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு, “உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். எனது ஆதார் எண்ணை வைத்துக் கொண்டு, எனக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்' என பதிவிட்டிருந்தார்.



இவரது இந்த திடீர் சவால் ட்விட்டரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சவாலுக்கு பதிலடியாக, பிரான்ஸை சேர்ந்த எல்லியட் ஆல்டர்சன் என்பவர், ஷர்மாவின் பிறந்த தேதி, இடம், தற்போதைய முகவரி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டார்.

அத்துடன், “வெளியிடப்பட்ட தகவல்கள் போதும் என நினைக்கிறேன். அதனால் நிறுத்திக்கொள்கிறேன். ஆதார் எண்ணை பொதுவெளியில் பதிவிட்டது தவறு என்பதை தற்போது புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்” என எல்லியட் ஆல்டர்சன் ஷர்மாவுக்கு பதில் ட்வீட்டும் செய்திருந்தார். இதனால் ஆதாரின் பாதுகாப்பு குறித்த சர்ச்சை மீண்டும் வெடிக்க துவங்கியது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஆதார் முகமை, டிராய் தலைவர் ஷர்மாவின் தகவல்கள் ஆதார் எண் மூலம் திருடப்படவில்லை என உறுதிபட தெரிவித்துள்ளது. மேலும், அவர் பல ஆண்டுகளாக அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார் என குறிப்பிட்ட ஆதார் முகமை, ஒரு அரசு ஊழியரின் அடிப்படை தகவல்களை கூகுள் போன்ற சாதாரண இணையங்களில் இருந்தே பெற முடியும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

இதுபோன்ற பல்வேறு சர்ச்சைகளில் ஆதார் முகமை விளக்கம் அளித்துள்ளது என்றாலும், ஆதாரின் பாதுகாப்பு குறித்த சர்ச்சையும், சந்தேகமும் முற்றுபெறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. #Aadhaar #UIDAI
Tags:    

Similar News