செய்திகள்

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் - புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2018-07-27 13:28 GMT   |   Update On 2018-07-27 13:28 GMT
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை மூன்றை சோதனைக்கு எடுத்துக்கொண்டால், அதில் ஒரு பாக்கெட்டில் உள்ள உணவு மரபணு மாற்றப்பட்டதாக உள்ளது என சோதனை முடிவில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

பிரெட்டில் தடவி சாப்பிட பயன்படுத்தும் சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாஸ் முதல் நொறுக்குத்தீனிகள், உணவுப்பொருட்கள் என சகலமும் தற்போது பாக்கெட்டில் அடைக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் கெடாமல் இவை இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வேதிப்பொருட்கள் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. டெல்லி, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள கடைகளில் கிடைக்கும் 65 வகையான பாக்கெட் உணவுகளை சேகரித்துள்ளனர்.

இவற்றில் 30 இந்திய தயாரிப்பாகவும், 35 இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இருந்துள்ளது. மேற்கண்ட 65 வகை பாக்கெட் உணவுகளை சோதனை செய்ததில் 21 பாக்கெட்டுகளில் இருக்கும் உணவுகள் மரபணு மாற்றப்பட்டுள்ள பொருட்களை மூலப்பொருளாக கொண்டுள்ளது.

அதாவது, மூன்று பாக்கெட் உணவுகளை எடுத்துக்கொண்டால் அதில் ஒன்று மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செய்யப்பட்டதாக உள்ளது.

முன்னணி நிறுவனங்களின் பொருட்கள் என்றாலும் மூன்றாவது தரப்பால் தயாரிக்கப்பட்டு இந்தியாவால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களே இதில் அடக்கம். பச்சிளம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் எண்ணெய், சிரப், உணவுப்பொருட்கள் ஆகியவற்றிலும் இந்த மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மரபணு மாற்றப்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை அரசின் அனுமதி இல்லாமல் விற்பது சட்டவிரோதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News