செய்திகள்

கேரளாவில் நிபாவை தொடர்ந்து ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு- 2 வயது குழந்தை உயிரிழப்பு

Published On 2018-07-24 05:40 GMT   |   Update On 2018-07-24 05:40 GMT
நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை 2 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். #shigellavirus
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபா வைரஸ் பரவியது. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேகமாக பரவியதால் மாநிலம் முழுவதும் ஏராளமான பொது மக்கள் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

நிபா வைரஸ் தாக்குதலுக்கு நர்சு உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அது கட்டுப்படுத்தப்பட்டது. இதன்பிறகே கேரள மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.

இந்த நிலையில் நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதால் இதுவும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஷிகெல்லா வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜியான் என்ற 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. மேலும் 2 குழந்தைகள் இந்த பாதிப்பு காரணமாக அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டாக்டர்கள் குழு அந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.



இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையில் கேரளாவில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. கொசுக்கள் மூலம் பரவும் இந்த காய்ச்சலுக்கு இதுவரை 2,564 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 15 பேர் உயிரிழந்து உள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளாவில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில் ஷிகெல்லா வைரஸ், டெங்கு காய்ச்சல் பரவி வருவது பொது மக்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. #shigellavirus
Tags:    

Similar News