செய்திகள்
கோட்டயத்தில் வீட்டை சூழ்ந்த மழை வெள்ளம்.

கேரளாவில் 26-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை: ரூ.1257 கோடி சேதம்

Published On 2018-07-24 04:52 GMT   |   Update On 2018-07-24 04:52 GMT
வருகிற 26-ந்தேதி வரை கேரளாவில் கனமழை நீடிக்கும் என்றும், 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழையால் ரூ.1,257 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. #KeralaRain
திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கனமழையாக கொட்டி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. கோட்டயம், கோழிக்கோடு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடும் சேதத்தை சந்தித்துள்ளது.

எர்ணாகுளம், ஆலப்புழா, திருவனந்தபுரம், மலப்புரம் ஆகிய பகுதிகளிலும் அதிக மழை பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கேரள மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நேற்று மழைக்கு ஆலப்புழாவில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 118 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் வருகிற 26-ந்தேதி வரை கேரளாவில் கனமழை நீடிக்கும் என்றும், 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த மழை காரணமாக கேரளாவில் பல மாவட்டங்களில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் ஆறுகள் போல் மாறிவிட்டன. இதனால் ஏராளமான பொது மக்கள் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். மாவட்டத்திற்கு 6 முகாம்கள் வீதம் மழை வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம்புகுந்து உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாநில அரசு மூலம் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுவரை ரூ.1,257 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ.293 கோடிக்கு பயிர் சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளது. ஏராளமான சாலைகள் இருந்த தடமே தெரியாத அளவுக்கு மழை வெள்ளத்தால் அரித்துச் செல்லப்பட்டுவிட்டது.


சபரிமலையிலும் மழை நீடிக்கிறது. கொட்டும் மழையிலும் சிரமத்தை பொருட்படுத்தாமல் பக்தர்கள் மலை ஏறிச் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் உள்ள பம்பை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அதில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய மந்திரி ரிஜ்ஜு தலைமையிலான குழு வந்துள்ளது. அவர்கள் தொடர்ந்து வெள்ள சேதங்களை கணக்கிட்டு வருகிறார்கள். இவர்கள் தங்கள் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்த பிறகு கேரளாவுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படும். #KeralaRain
Tags:    

Similar News