செய்திகள்

பசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்துவதை தடுக்க தனிச்சட்டம் இயற்றவேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு யோசனை

Published On 2018-07-17 21:13 GMT   |   Update On 2018-07-17 21:13 GMT
பசு பாதுகாவலர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க தனிச் சட்டம் இயற்றவேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது.
புதுடெல்லி:

வடமாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சில வன்முறைக் கும்பல் மாட்டிறைச்சி சாப்பிடும் அப்பாவி மக்களை குறி வைத்து கடுமையாக தாக்குவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இவர்கள் பலரை அடித்துக் கொன்றும் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இப்படி வன்முறைக் கும்பல் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத்தகைய தாக்குதல்களை தடுக்க தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறை களை பிறப்பிக்கவேண்டும் என்று கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மகாத்மா காந்தியின் கொள்ளுபேரன் து‌ஷார் காந்தி உள்பட பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியதாவது:-

பசு பாதுகாவலர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. திரளானவர்கள் ஒன்று கூடி அப்பாவி மக்கள் மீது பயங்கரமாக தாக்குதல் நடத்துவது புதிய சட்டவழி முறையாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தீர்வு காணும் முறைகள், தகுந்த தண்டனை ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம்.

இதை மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் செயல்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். எந்த மாநில அரசும் இந்த வி‌ஷயத்தை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. யாராவது அராஜகத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனென்றால் எந்த வகையிலும் வன்முறையை அனுமதிக்க இயலாது. தனி நபர்கள் யாரும் சட்டத்தின் காவலர்களாக ஆகி விடவும் கூடாது.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துபவர்கள் மற்றும் கொலை செய்யபவர்களை தண்டிக்கவும், அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவும் தனிச் சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஆகஸ்டு) 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இப்பிரச்சினை தொடர்பாக கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனைத்து மாநில அரசுகளுக்கும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது, நினைவு கூரத்தக்கது.  #Tamilnews #CowVigilantism #SupremeCourt
Tags:    

Similar News