செய்திகள்

முதல்வருடன் வாக்குவாதம் செய்து சஸ்பெண்ட் ஆன ஆசிரியருக்கு ‘பிக்பாஸ்’ அழைப்பு

Published On 2018-07-03 14:27 GMT   |   Update On 2018-07-03 14:27 GMT
டிவி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொள்ள சம்மதமா? என்று தொலைபேசி அழைப்பு வந்ததாக சமீபத்தில் உத்தரகாண்ட் முதல்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன பெண் ஆசிரியர் தெரிவித்துள்ளார். #BigBoss
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் முதல்வர் திரிவேந்திர ராவத் தலைமையில் பொதுமக்களிடம் குறை கேட்கும் ஜனதா தர்பார் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பகுகுணா, பணியிட மாறுதல் கேட்டு மனு அளித்தார்.

அந்த மனுவில், தாம் உத்தரகாசியில் ஒரு ஊரகப் பகுதி அரசுப் பள்ளியில் 25 ஆண்டுகளாக ஆசிரியராக உள்ளதாகவும், தமது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் தமது பிள்ளைகள் வசிக்கும் டேராடூனுக்கு இடம் மாற்றம் செய்து தருமாறும் கோரினார்.

ஆனால், சட்டப்படி அதற்கு வழி இல்லை என முதல்வர் கூறவே, அதனை ஏற்க மறுத்த ஆசிரியர் பகுகுணா முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த திரிவேந்திர ராவத் பகுகுணாவை கைது செய்யவும், பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட்டார். கடும் எதிர்ப்புக்கு பின் ஆசிரியர் பகுகுணாவை காவல்துறை விடுவித்துவிட்டனர். ஆனால், பணி நீக்க நடவடிக்கை தொடர்கிறது.

இந்நிலையில், தனக்கு பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து போன் வந்ததாகவும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதமா? என அவர்கள் கேட்டதாக தெரிவித்துள்ளார். எனது குழந்தைகளை கவனித்து கொண்டு வீட்டோடு இருக்கவே விரும்புகிறேன் என கூறி அழைப்பை துண்டித்ததாக பகுகுணா கூறியுள்ளார்.
Tags:    

Similar News