செய்திகள்

4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு பயணம்- மோடி பயணத்துக்கு ரூ.355 கோடி செலவு

Published On 2018-06-28 11:12 IST   |   Update On 2018-06-28 11:12:00 IST
மோடி பிரதமராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அவர் இதுவரை 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாகவும் அதற்கான செலவு ரூ.355 கோடி எனவும் தெரியவந்துள்ளது. #Modi #PMModi
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார்.

அதோடு வெளிநாட்டு முதலீடுகளையும் இந்தியாவுக்கு பெற நடவடிக்கை மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் கிண்டல் செய்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பது பற்றிய தகவல்களை தர வேண்டும் என்று பீமப்பா என்பவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார்.

அதற்கு பிரதமர் அலுவல கம்பதில் அளித்துள்ளது. அந்த பதிலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 4 அண்டுகளில் பிரதமர் மோடி 41 தடவை வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த 41 தடவை பயணத்தின்போது பிரதமர் மோடி 52 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். 2014-ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி தொடங்கி சமீபத்தில் இந்தோனேசியா சென்று வந்தது வரை அவரது சுற்றுப்பயணத்தில் இடம் பெற்ற 52 நாடுகள் விபரம் வருமாறு:-

1. பூடான், 2. பிரேசில், 3. நேபாளம், 4. ஜப்பான், 5. இலங்கை, 6. ஜெர்மனி, 7. ஸ்பெயின், 8 ரஷ்யா, 9. பிரான்சு, 10. கஜகஸ்தான், 11. போர்ச்சுக்கல், 12. அமெரிக்கா, 13. நெதர்லாந்து, 14. இஸ்ரேல், 15. சீனா, 16. மியான்மர், 17. பிலிப்பைன்ஸ், 18. சுவிட்சர்லாந்து, 19. ஜோர்டன், 20. பாலஸ்தீனம், 21. ஐக்கிய அரபு எமிரேட், 22. ஓமன், 23. சுவீடன், 24. இங்கிலாந்து, 25. ஆஸ்திரேலியா, 26. பிஜு தீவு.

27. செசல்ஸ், 28. மொரி சீயஸ், 29. கனடா, 30. மங்கோலியா, 31. தென்கொரியா, 32. வங்கதேசம், 33. துர்க் மெனிஸ்தான், 34. கிர்கிஸ்தான், 35. தஜிகிஸ்தான், 36. அயர்லாந்து, 37. மலேசியா, 38. சிங்கப்பூர், 39. ஆப்கானிஸ்தான், 40. பாகிஸ்தான், 41. பெல்ஜியம், 42. சவுதிஅரேபியா, 43. ஈரான், 44. கத்தார், 45. மெக்சிகோ, 46. குமாசாம்பிக், 47. தென்ஆப்பிரிக்கா, 48. தான்சானியா, 49. கென்யா, 50. வியட்நாம், 51. லாவோல், 52. இந்தோனேசியா.

இந்த 52 நாடுகளுக்கும் பிரதமர் மோடி சென்று வந்த வகைக்கு 355 கோடியே 30 லட்சத்து 38 ஆயிரத்து 465 ரூபாய் அரசுப் பணம் செலவாகியுள்ளது. இதில் மோடியின் 5 பயணங்களுக்கான செலவு சேர்க்கப்படவில்லை. இந்தியா விமான படைக்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்ததால், அந்த செலவு சேர்க்கப்படவில்லை.

அந்த 5 விமான பயணச் செலவையும் சேர்த்தால் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு மேலும் அதிகமாக உயர்ந்திருக்கும். மோடி மேற்கொண்ட 41 வெளிநாட்டு பயணங்களில் 2015-ம் ஆண்டு பிரான்சு, ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாட்டு பயணம்தான் அதிக செலவு ஏற்படுத்தியது. அந்த ஒரு பயணத்துக்கு மட்டும் 31 கோடியே 25 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவானது.

பிரதமர் மோடியின் 41 வெளிநாட்டு பயணங்களில் பூடானுக்கு சென்று வந்தது தான் மிக, மிக குறைந்த செலவை கொடுத்தது. பூடான் பயணத்துக்கு 2 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரத்து 465 ரூபாய் செலவிடப்பட்டது.

பிரதமர் மோடியின் வெளிநாடுகள் பயணம் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டப்படி கிடைத்துள்ளது. மோடியின் உள்நாட்டு சுற்றுப்பயணத்துக்கு எவ்வளவு செலவானது என்ற விபரத்தை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை.

அதுபோல பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்ற விபரமும் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு செலவு விபரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிந்து கொள்ள விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே மோடியின் பாதுகாப்புக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்ற விபரத்தை யாரும் தெரிந்துகொள்ள இயலாது. #Modi #PMModi
Tags:    

Similar News