செய்திகள்

உத்தரபிரதேசத்தில் இன்று நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

Published On 2018-06-27 22:26 GMT   |   Update On 2018-06-27 22:26 GMT
உத்தரபிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். #NarendraModi #UttarPradesh
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த ஆன்மிகவாதியும், கவிஞருமான கபீர், அங்குள்ள சந்த் கபீர் நகர் மாவட்டத்தின் மெகர் நகரில் உயிர்நீத்தார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட கபீரின் நினைவாக கோவில் ஒன்றை இந்துக்களும், நினைவிடம் ஒன்றை முஸ்லிம்களும் மெகர் நகரில் நிறுவியுள்ளனர்.

இந்த நகர் முழுவதையும் சுற்றுலா தலமாக மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கபீரின் போதனை விளக்க மையம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மிகப்பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.25 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கபீரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மெகர் நகருக்கு செல்கிறார். அங்கு கபீரின் நினைவிடம் மற்றும் தர்காவில் மரியாதை செலுத்தும் அவர், பின்னர் அங்கு ரூ.2½ கோடியில் கட்டப்படும் கபீர் அகாடமிக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.



மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள இந்த பொதுக்கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று செய்து வருகிறார். இந்த கூட்டத்தில் 2½ லட்சம் பேரை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாகவே பா.ஜனதாவினர் கருதுகின்றனர். நெசவாளர்களின் ஆதரவை பெறும் நோக்கில், நெசவுத்தொழிலை செய்து வந்த கபீரின் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி செல்வதாக கூறும் அவர்கள், சுவாமி ராமானந்தாவின் சீடராக கபீர் கருதப்படுவதால், வைஷ்ணவ பக்தர்களின் ஆதரவையும் இதன் மூலம் பெற முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கும் நிலையில், பிரதமரின் மெகர் நகர பொதுக்கூட்டம் பா.ஜனதாவினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் காலை 10 மணிக்கு கோரக்பூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மெகர் நகருக்கு செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் மெகர் நகர் முழுவதையும் சிறப்பு கமாண்டோ படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். இதற்காக அருகில் உள்ள இந்தியா-நேபாள எல்லைப்பகுதி மூடப்பட்டு உள்ளதுடன், உளவுத்துறையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் மத்திய பாதுகாப்பு படை, மாநில போலீசார் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டால் கோரக்பூரில் இருந்து மெகருக்கு காரில் செல்ல நேரிடும். எனவே இதற்காக 30 கி.மீ. தொலைவுக்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.  #NarendraModi #UttarPradesh  #Tamilnews
Tags:    

Similar News