செய்திகள்

பிரதமரின் அத்தை புகாரின்பேரில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ்

Published On 2018-06-26 02:07 IST   |   Update On 2018-06-26 02:07:00 IST
குத்தகை நிலுவைத்தொகை தொடர்பாக பிரதமரின் அத்தை தாஹிபென் அளித்த புகாரின்பேரில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். #DahibenNarottamdasModi
புதுடெல்லி:

குஜராத் மாநிலம் மெசானா மாவட்டம் வாத்நகரை சேர்ந்தவர் தாஹிபென் நரோட்டம்தாஸ் மோடி. 90 வயதான இந்த மூதாட்டி, தன்னை பிரதமர் நரேந்திர மோடியின் அத்தை என்று சொல்கிறார். வத்நகரில் இவருக்கு சொந்தமான கட்டிடத்தை, பீடி தொழிலாளர்களுக்கு மருந்தகம் அமைப்பதற்காக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் 1983-ம் ஆண்டு குத்தகைக்கு எடுத்தது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை புதுப்பிக்கப்பட வேண்டும்.

ஆனால், 1998-ம் ஆண்டுக்கு பிறகு குத்தகையை புதுப்பிக்காத அமைச்சகம், அப்போது கொடுத்த மாத வாடகை ரூ.1,500-ஐ இப்போதும் அளித்து வருகிறது. இதனால், குத்தகை புதுப்பிப்பது தொடர்பாகவும், புதுப்பிக்காத ஆண்டுகளுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படுமா? என்றும் கேட்டு தகவல் ஆணையத்தில் கடந்த ஆண்டு தாஹிபென் மனு அளித்தார்.

ஆனால், மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் உதவி நல்வாழ்வு அதிகாரி மொய்த்ராவும், அவருடைய உயர் அதிகாரி போப்லேவும் போதிய தகவல்களை அளிக்கவில்லை. தான் பிரதமரின் அத்தை என்று அவர் மேல்முறையீட்டு மனுவில் கூறியும் அவர்கள் அலட்சியமாக செயல்பட்டனர்.

எனவே, மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சர்யலு, மேற்கண்ட 2 அதிகாரிகளுக்கும் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது? என்று கேட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.  #DahibenNarottamdasModi #Tamilnews 
Tags:    

Similar News