செய்திகள்

அமித் ஷாவை இயக்குனராக கொண்ட வங்கியில் முறைகேடாக டெபாசிட் செய்யப்படவில்லை- நபார்டு வங்கி

Published On 2018-06-22 14:32 GMT   |   Update On 2018-06-22 14:32 GMT
அமித் ஷா இயக்குனராக இருக்கும் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக டெபாசிட் எதுவும் செய்யப்படவில்லை என நபார்டு வங்கி விளக்கம் அளித்துள்ளது. #AmitShah #NABARD
புதுடெல்லி:

அமித்ஷாவை இயக்குனராக கொண்ட அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி, 2016-ல் பணமதிப்பு நீக்கம் அமலில் இருந்த போது, 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகளை பெற்றதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நபார்டு வங்கி விளக்கம் அளித்துள்ளது. அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக டெபாசிட் எதுவும் செய்யப்படவில்லை என நபார்டு வங்கி கூறியுள்ளது.

இது தொடர்பாக நபார்டு வங்கி அளித்துள்ள விளக்கம் வருமாறு:-

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.500 ரூ.1000 நோட்டுகள் வழக்கத்துக்கு மாறாக அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில்  டெபாசிட் செய்யப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் விதிப்படியே பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

அகமதாபாத் கூட்டுறவு வங்கியில்  மொத்தம் 17 லட்சம் பேர் கணக்கு வைத்துள்ளார்கள். 1.6 லட்சம் வாடிக்கையாளர்கள் சராசரியாக ரூ.46 ஆயிரத்து 795 டெபாசிட் செய்தனர். ஒட்டுமொத்த கணக்குதாரர்களில் 9.37 சதவீதம் வாடிக்கையாளர்களே செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றினார்கள்.

98.94 சதவீதம் கணக்குதாரர்கள் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாகவே டெபாசிட் செய்தனர், செல்லாத ரூபாய்களைக் கொடுத்து பரிமாற்றம் செய்தனர். 5 நாட்களில் 1.60 லட்சம் கணக்குதாரர்கள் மூலம் ரூ.746 கோடி டெபாசிட் வந்தது உண்மைதான். இது வங்கியின் டெபாசிட்களில் 15 சதவீதம் மட்டுமே. டெபாசிட்கள் அனைத்தும் விதிமுறையின்படியே நடந்தது. குஜராத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்களைக் காட்டிலும், மராட்டிய கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்தான் அதிகமாகும். நாட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் அகமதாபாத் கூட்டுறவு வங்கி முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் வர்த்தக அளவு என்பது ரூ.9 ஆயிரம் கோடியாகும்.

சமீபத்தில் இந்த வங்கிக்குச் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதும் வழங்கப்பட்டுள்ளது. வங்கியில் விதிமுறைப்படியே டெபாசிட்கள் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு நபார்டு வங்கி தெரிவித்துள்ளது. #AmitShah #NABARD
Tags:    

Similar News