செய்திகள்

தலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா - கேப்டன் தூங்குவதாக ராகுல்காந்தி விமர்சனம்

Published On 2018-06-21 12:50 IST   |   Update On 2018-06-21 12:50:00 IST
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா செய்தது குறித்து ராகுல்காந்தி கேப்டன் (மோடி) வேகமாக தூங்குகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். #ArvindSubramanianResigns
புதுடெல்லி:

தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் (வயது59). கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிந்த நிலையில் அதே பதவியில் சிறிது காலம் தொடருமாறு அரசு கேட்டுக் கொண்டது.

இந்த நிலையில் பதவி காலம் முடிய 4 மாதம் உள்ள நிலையில் அரவிந்த் சுப்பிரமணியன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.


இந்த தகவலை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டி இருப்பதால் தவிர்க்க முடியாத காரணத்தால் பதவி விலக விரும்புவதாக அரவிந்த் சுப்பிரமணியன் தன்னிடம் தெரிவித்ததாக ஜெட்லி தெரிவித்தார்.

அரவிந்த் சுப்பிரமணியனின் குடும்ப சூழல் கருதி அவரது ராஜினாமாவை ஏற்றதாக ஜெட்லி தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடி அரசை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-


நிதி மந்திரி (முன்னாள்?) பூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு பேஸ்புக் மூலம் முக்கிய செய்திகளை வெளியிடுகிறார். இந்தியா பொருளாதாரத்தின் சாவி பா.ஜனதா பொருளாளரிடம் இருக்கிறது.

பா.ஜனதா அரசு மூழ்கும் கப்பல் என்பதால் அதில் இருந்து திறமையானவர்கள் விலகி செல்கிறார்கள். கண்ணுக்கு புலப்படாத கையால் ஆர்.எஸ்.எஸ். தன் வசப்படுத்த பார்க்கிறது.

அதே நேரத்தில் கேப்டன் டிமோ (மோடி) வேகமாக தூங்குகிறார். இது பைத்திய காரதனமாக உள்ளது.

இவ்வாறு ராகுல்காந்தி மோடி அரசை தாக்கியுள்ளார். #ArvindSubramanianResigns #RahulGandhi
Tags:    

Similar News