செய்திகள்

காஷ்மீர் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் - உமர் அப்துல்லா வலியுறுத்தல்

Published On 2018-06-20 08:18 GMT   |   Update On 2018-06-20 08:18 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபையை உடனே கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா வலியுறுத்தினார். #BJPDumpsPDP #JKGovernorRule #JKOmar
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று ஆண்டுகளாக ஆளும் கூட்டணியில் இருந்த பா.ஜ.க. நேற்று திடீரென கூட்டணியில் இருந்து விலகியது. இதனால் பெரும்பான்மை இழந்ததையடுத்து முதல்வர் மெகபூபா முப்தி பதவியை ராஜினாமா செய்தார். வேறு எந்த கட்சியும் ஆட்சியமைக்க முயற்சிக்கவில்லை. புதிய ஆட்சி அமையும் சூழ்நிலை இல்லாததால் இன்று முதல் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் சட்டசபையை உடனடியாக கலைத்துவிட்டு புதிதாக தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா வலியுறுத்தி உள்ளார். ஆட்சியமைப்பதற்காக பா.ஜ.க. குதிரைபேரத்தில் ஈடுபடாது என்பதை நம்ப முடியாது என்றும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு விரைவில் அமையாது, ஆனால் நாங்கள் ஒரு காரியத்தில் ஈடுபட்டுள்ளோம். அது மக்களுக்கு நன்கு தெரியும் என பா.ஜ.க. தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கவிந்தர் குப்தா கூறியிருந்தார்.

இதனை சுட்டிக் காட்டிய உமர் அப்துல்லா, “ஏதோ ஒரு காரியத்தில் ஈடுபடுகிறோம் என்றால் என்ன அர்த்தம்? அது மற்ற கட்சிகளை உடைத்து, பா.ஜ.க. ஆட்சி அமைக்க தேவையான உறுப்பினர்களை திரட்டுவதாகத் தான் இருக்கும். இந்த ரகசியத்தை அவரே வெளியிட்டுவிட்டாரா?” என்று தெரிவித்துள்ளார். #BJPDumpsPDP #JKGovernorRule #JKOmar
Tags:    

Similar News