செய்திகள்

ஜெயநகரை கைப்பற்றுவது காங்கிரசா, பாரதிய ஜனதாவா? - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Published On 2018-06-13 09:08 IST   |   Update On 2018-06-13 09:08:00 IST
கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. #KarnatakaBypoll #Jayanagar
பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்ததால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் ஜெயநகர் தொகுதியில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் 1,11,689 வாக்காளர்கள் (55 சதவீதம்) வாக்களித்தனர்.



இந்த தொகுதியில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளித்துள்ளதால், காங்கிரசுக்கும் பா.ஜனதாவுக்கு இடையே நேரடிப் போட்டி இருந்தது.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு, எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி, பா.ஜ.க. வேட்பாளர் பிரகலாத்தை விட 427 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். #KarnatakaPoll #Jayanagar #JayanagarCounting
Tags:    

Similar News