செய்திகள்

கவர்னர் வீட்டில் இரண்டாவது நாளாக தொடரும் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டம்

Published On 2018-06-12 11:31 GMT   |   Update On 2018-06-12 11:31 GMT
டெல்லி மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த துணை நிலை ஆளுனர் ஒத்துழைப்பு வழங்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார். #AnilBaijal #CMArvindKejriwal
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்களை கொண்டுவந்தார்.

இந்த திட்டங்களை அமல்படுத்திட சம்பந்தப்பட்ட துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் கெஜ்ரிவால் உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புறக்கணித்தனர்.

இதுதொடர்பாக அவர் நேற்று இரவு துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அவரது இல்லம் சென்றார். ஆனால், அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் கவர்னர் வீட்டின் வரவேற்பாளர் அறையில் நேற்று இரவு முழுதும் படுத்து தூங்கி தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் துணை முதல்வர் மற்றும் 2 மந்திரிகளும் உடனிருந்தனர். 

இந்நிலையில், இது குறித்து இன்று வீடியோ பதிவு வெளியிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், நாங்கள் நேற்று டெல்லி துணை நிலை ஆளுனரின் இல்லத்தில் அவரை சந்தித்தோம். சந்திப்பின் போது, ரேசன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். 

திட்டங்களை அமல்படுத்திட உத்தரவிட்டும் செயல்படுத்தாமல் வேலைநிறுத்தத்தில் இருப்பது போல் உள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அரசு செல்வதை கேட்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றினால் தான் வீட்டை விட்டு வெளியே செல்வோம் என கவர்னரிடம் தெரிவித்துவிட்டோம்.

இது குறித்து எந்த நடவடிக்கையும் கவர்னர் எடுக்காத காரணத்தினால் எங்களின் தர்ணா போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. எங்களுக்காக நாங்கள் கவர்னர் வீட்டில் தர்ணா போராட்டம் நடத்தவில்லை, டெல்லி மக்களுக்காக செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு நலத்திட்டங்கள் நிலுவையில் உள்ளது. அவற்றை நிறைவேற்ற ஒத்துழைப்பு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், இது டெல்லி மக்களுக்கான போராட்டம் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #AnilBaijal #CMArvindKejriwal
Tags:    

Similar News