செய்திகள்

நான் பயந்தது நடந்தே விட்டது - மார்பிங் புகைப்படங்கள் குறித்து பிரணாப் மகள் ட்வீட்

Published On 2018-06-08 15:24 IST   |   Update On 2018-06-08 15:38:00 IST
ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்ற நிலையில், அது தொடர்பாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் பரவி வருவது தொடர்பாக பிரணாப்பின் மகள் கருத்து தெரிவித்துள்ளார். #PranabAtRSSEvent
புதுடெல்லி:

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சம்மதித்தபோதே கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பிரணாப் முகர்ஜியின் மகளான சர்மிஸ்தா முகர்ஜியும் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரின் கருப்பு தொப்பி அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது போலவும், கைகளை நெஞ்சுக்கு நேராக வைத்து மரியாதை செலுத்தியது போலவும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பிரணாப் புகழ்ந்து பேசியது போல வாட்ஸப்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.



ஆனால், உண்மையில் பிரணாப் அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக, இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடுவோம். சகிப்புத்தன்மை இல்லாவிட்டால் நாடு சீர்குலையும் என ஆர்.எஸ்.எஸ்.க்கு பாடம் எடுத்திருந்தார். இந்நிலையில், மார்பிங் புகைப்படங்கள் குறித்து பிரணாப்பின் மகள் அச்சம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சர்மிஸ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நான் எதை நினைத்து பயந்தேனோ, எதற்காக எனது அப்பாவை எச்சரித்தேனோ அது நடந்தே விட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிலமணி நேரங்கள் கூட ஆகவில்லை. ஆனால், பாஜக / ஆர்.எஸ்.எஸ் அதன் வேலையை முழு வீச்சாக செய்ய ஆரம்பித்து விட்டது” என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News