செய்திகள்

நீட் தேர்வில் தோல்வியடைந்த ஐதராபாத் மாணவி 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

Published On 2018-06-05 20:21 GMT   |   Update On 2018-06-05 20:21 GMT
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஐதராபாத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #NEET #NEET2018 #NEETkills
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர், ஐதராபாத் கச்சிக்குடா பகுதியை சேர்ந்தவர் மாணவி ஜஸ்லீன் கவுர் (வயது 18). இந்த மாணவி, ‘நீட்’ தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்த நிலையில் அவர் நேற்று காலை 10.30 மணிக்கு அங்கு அபிட்ஸ் பகுதியில் அமைந்து உள்ள 10 மாடிகளை கொண்ட மயூரி வணிக வளாகத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். வாகனத்தை நிறுத்திவிட்டு விறுவிறுவென மாடிப்படிகள் ஏறி, அந்த கட்டிடத்தின் உச்சிக்கு சென்றார்.

அவர் அங்கு இருந்து குதிக்கப்போவதை உணர்ந்த பலரும் அவரை குதிக்க வேண்டாம் என்று அலறினர். ஆனால் அதையும் மீறி அவர் கீழே குதித்து விட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, ஜஸ்லீன் கவுரின் உடலை கைப்பற்றி, அரசு உஸ்மானியா ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த மாணவி, மாடிப்படியேறி கட்டிடத்தின் உச்சிக்கு சென்று கீழே குதித்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

டெல்லி துவாரகா 12-வது செக்டாரை சேர்ந்தவர் மாணவர், பிரணவ் மெஹந்திரத்தா (வயது 19). இவர் 2016-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் வெற்றிபெற்று, மருத்துவ படிப்பில் சேருவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு எழுதியும், அவற்றில் தோல்வி அடைந்ததால் இந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வு எழுதினார்.

தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியான சிறிது நேரத்திலேயே பிரணவ் 8-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ரத்த வெள்ளத்தில் அவரது உடல் தரையில் கிடந்தது. போலீசார் விரைந்து வந்து விசாரித்ததில், அவர் ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததும், ஆனால் பெற்றோரிடம் வெற்றிபெற்றதாக பொய் சொல்லி இருந்ததும் தெரிந்தது.

இதுபற்றி பிரணவ் தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதமும் சிக்கியது. அவர் ஏற்கனவே படுக்கை அறையில் ஒரு துப்பட்டாவை தூக்குகயிறாக கட்டியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் ‘நீட்’ தேர்வை 3 முறை மட்டுமே எழுத முடியும் என்று விதி வகுக்கப்பட்டு உள்ளது. மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவு தகர்ந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.

ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.  #NEET #NEET2018 #NEETkills
Tags:    

Similar News