செய்திகள்
கைதான போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை படத்தில் காணலாம்

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது

Published On 2018-06-05 05:33 GMT   |   Update On 2018-06-05 05:33 GMT
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள போதை பவுடரை கடத்தி வந்த சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து கேரளா வழியாக மாலத்தீவுக்கு போதை பொருள் கடத்த இருப்பதாக டெல்லியில் உள்ள தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவல் உடனடியாக கேரள போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கண் காணிப்பை பலப்படுத்தினர். பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

அப்போது மாலத்தீவுக்கு செல்ல இருந்த 3 பயணிகளை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் மாலத்தீவைச் சேர்ந்த ஜாமன் அகமது(வயது24), சாபிங்(29), சானித்மாகின்(27) என்பது தெரிய வந்தது. அவர்களின் உடமைகளை பரிசோதித்த போது 17 கிலோ போதை பவுடர் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சர்வதேச சந்தையில் இந்த போதை பொருளின் மதிப்பு ரூ.5 கோடியாகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

கைதானவர்களில் சானித் மாகின் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஆவார். இந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வந்து கைதானவர்களிடம் விசாரணை நடத்தினர். திருவனந்தபுரத்தில் மிகப் பெரிய அளவில் போதை பொருள் சிக்கியதும், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைதாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News