செய்திகள்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

Published On 2018-06-01 23:21 GMT   |   Update On 2018-06-01 23:21 GMT
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தாவூத் இப்ராகிம் கூட்டாளி அகமது லம்பு 25 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார். #BombayBlast #AhmedLambu
ஆமதாபாத்:

மும்பையில் 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புகள், உலகையே உலுக்கின. 257 பேரை பலி கொண்டு, 700-க்கும் மேற்பட்டோரை காயப்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அகமது லம்பு என அறியப்படுகிற அகமது ஷேக் (வயது 52) என்பவர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவர் தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, நாட்டில் இருந்து தப்பி விட்டார். அதன்பின்னர் அவர் போலீஸ் பிடியில் சிக்கவே இல்லை. அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ (சர்வதேச தேடல் அறிவிக்கை) பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அவரது தலைக்கு ரூ.5 லட்சம் விலையும் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அவர் குஜராத்தின் தென்பகுதியில் வல்சாட் கடற்கரை பகுதியில் பதுங்கி உள்ளதாக பயங்கரவாத தடுப்பு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர் அங்கு விரைந்து சென்று, அகமது ஷேக்கை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சம்பவம் நடந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கி உள்ள அவர், சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படுவார் என குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

அகமது லம்பு, மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.  #BombayBlast #AhmedLambu #tamilnews 
Tags:    

Similar News