செய்திகள்

ராஜினாமாவை ஏற்கும்படி மக்களவை சபாநாயகரை வலியுறுத்தும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள்

Published On 2018-05-28 10:28 GMT   |   Update On 2018-05-28 10:28 GMT
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என கூறி ராஜினாமா செய்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள், ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகரை வலியுறுத்த உள்ளனர். #AndhraPradesh #specialstatus
ஐதராபாத்:

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் மீது அதிருப்தி தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்களை பதவி விலக வைத்தார். அதன்பின் பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.

இதேபோல் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா கடித்தத்தை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மக்களவை சபாநாயகரிடம் அளித்தனர்.

ஆனால் இதுவரை சபாநாயகர் அவர்களது ராஜினாமாவை ஏற்கவில்லை என்றும், அதற்கான காரணமும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த வாரத்தில் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் நாளை (மே.29) சபாநாயகரை நேரில் சந்திக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவரான மேகபதி ராஜமோகன் ரெட்டி கூறுகையில், ‘நாளை குறித்த நேரத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து எங்களது விளக்கத்தை அளித்து ராஜினாமாவை ஏற்கும்படி வலியுறுத்துவோம். இதுவரை ராஜினாமாவை ஏற்காததற்கான காரணம் தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் மக்களவை சபாநாயகர், எம்.பி.க்களின் ராஜினாமாவை ஏற்று, 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வழிவகுப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. #AndhraPradesh #specialstatus
Tags:    

Similar News