செய்திகள்

நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் விடுக்க இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு

Published On 2018-05-20 22:37 GMT   |   Update On 2018-05-20 22:37 GMT
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் விடுக்க இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #NiravModi #CBI #PNBScam #Interpol #redcornernotice

புதுடெல்லி:

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் அளித்த நிலையில் நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் வெளிநாட்டு தப்பிச்சென்று விட்டனர். 

இந்த வழக்கில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நிரவ் மோடி அவருடைய குடும்பத்தினர் தவிர, பஞ்சாப் நேஷனல் வங்கியின் 4 உயர் அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்ட இருந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வழக்கமான அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், “நிரவ் மோடி வங்கிக்கு செலுத்தவேண்டிய ஒட்டு மொத்த கடன் தொகை ரூ.14,356 கோடி ஆகும். வங்கி உறுதியளிப்பு கடிதங்களை தவறான முறையில் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளிலும் இந்த மோசடி நடந்து இருக்கிறது. இதில் நிரவ் மோடியின் ஆபரண நிறுவனமும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டு உள்ளனர்” என்று கூறப்பட்டு இருக்கிறது. 



நிரவ் மோடி, சோக்சி உள்ளிட்டோரின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலை ஏற்கனவே சிபிஐ நாடியது. வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பாஸ்போர்ட் மூலம் லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது சகோதரர் நிஷால் மோடி பெல்ஜியம் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அண்ட்வெர்ப் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க, மீண்டும் இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படும் பட்சத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பதுங்கியுள்ள நாட்டிலேயே கைது செய்யப்பட்டு, அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #NiravModi #CBI #PNBScam #Interpol #redcornernotice
Tags:    

Similar News