செய்திகள்

எங்களது அடுத்த இலக்கு பாராளுமன்ற தேர்தல் - தேவேகவுடா

Published On 2018-05-20 07:03 GMT   |   Update On 2018-05-20 07:03 GMT
எங்களது அடுத்த இலக்கு 2019 பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா அறிவித்துள்ளார். #Parliamentelection #KarnatakaElection #DeveGowd

பெங்களூர்:

காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கர்நாடகா புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி வருகிற 23-ந்தேதி பதவி ஏற்கிறார்.

இந்த நிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது மகன் குமாரசாமி முதல்-மந்திரியாவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மதச்சார்பற்ற தன்மையுள்ள ஒரு ஆட்சியை உருவாக்க முடிந்தது எனக்கு நிம்மதியை தருகிறது. வகுப்பு வாத கட்சியை தடுத்து நிறுத்தக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெற்று இருந்தது திருப்தி அளிக்கிறது. இதற்கு மாநில கட்சி உதவியாக இருந்தது.

எங்கள் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று நாங்கள் எதிர்பார்த்ததுதான் எதிர்க்கட்சி வரிசையில் இருக்க தயாராக இருந்ததுதான். உண்மை. ஆனாலும் சூழல் வித்தியாசமாக அமைந்தது. மதச்சார்பற்ற அணிகள் ஒன்று இணையும் நிலை உருவானது. காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை எங்களுக்கு அளித்தது மகிழ்ச்சி அளித்தது.

2006-ம் ஆண்டு எனது மகன் பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இதனால் அவர் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டார் என்பதை அறிந்து இருந்தார். தற்போது பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தார். ஏற்கனவே செய்த தவறை மீண்டும் இந்த முறை செய்யமாட்டேன் என்று தெரிவித்தார். இதன் மூலம் தன் மீது இருந்த கறையை நீக்கி தற்போது சுத்தப்படுத்திக் கொண்டார்.

காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே இதற்கு முன்பு முழுமையான ஆட்சி அமையவில்லை. ஆனால் தற்போது அது மாதிரியான சூழ்நிலை இல்லை. தற்போது அமைய இருக்கும் புதிய அரசு 5 ஆண்டு காலம் பதவியில் இருக்கும் என்று நம்புகிறேன்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் 14-ந் தேதியே பெங்களூர் வந்துவிட்டார். 15-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையான போதே அவர் எங்களை தொடர்பு கொண்டு பேசினார். மதச்சார்பற்ற கட்சியான அவர்கள் முன்னேற்றம் காணும் வகையில் விவாதித்தனர். இதன் மூலம் பா.ஜனதாவின் திட்டத்தை முறியடிக்க முடிந்தது.

பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்ததால் பா.ஜனதா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் குதிரை பேரத்தை நம்பி ஆட்சி அமைத்து இருக்கக் கூடாது. நம்பர் இல்லாமல் பா.ஜனதாவின் கணக்கீட்டு முறை தவறானது.

எங்களது அடுத்த இலக்கு 2019 பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும். அதற்கான நேரம் இதுதான்.

பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா கூறியுள்ளார்.

Tags:    

Similar News