செய்திகள்

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா - ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

Published On 2018-05-17 03:42 GMT   |   Update On 2018-05-17 03:42 GMT
கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #Yeddyurappa #KarnatakaCM
பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.  

அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்தால் மெஜாரிட்டி இருப்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அதன்படி முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட குமாரசாமி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி எடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், திடீர் திருப்பமாக எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று இரவு அழைப்பு விடுத்தார். மேலும் பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க  ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை உடனடியாக விசாரித்த உச்ச நீதிமன்றம், பதவியேற்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.



இந்நிலையில் ஆளுநரின் அழைப்பையடுத்து ராஜ்பவனில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் எடியூரப்பாவுக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.



பதவியேற்பு விழாவில் மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பதவியேற்பு விழாவையொட்டி கவர்னர் மாளிகை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், பா.ஜ.க. அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனையடுத்து எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை ஆதரித்தால் மட்டுமே இது சாத்தியம். இதற்கு 15 நாட்கள் அவகாசம் இருப்பதால் குதிரைபேரம் நடைபெற வாய்ப்பு அதிகம். எனவே, காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வினர் நெருங்க விடாமல் பாதுகாத்து வருகின்றனர்.  #Yeddyurappa #KarnatakaCM

Tags:    

Similar News