செய்திகள்

வன்கொடுமை தடுப்பு சட்டம் மீது பிறப்பித்த உத்தரவு சரியானதுதான்- சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உறுதி

Published On 2018-05-17 09:05 IST   |   Update On 2018-05-17 09:05:00 IST
தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உறுதி செய்தது. #SC #ST #Dailt
புதுடெல்லி:

தலித், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் சில நேரங்களில் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த சட்டத்தின் கீழ் எந்த விசாரணையும் இன்றி ஒருவரை கைது செய்யக்கூடாது. முழுமையான விசாரணை நடத்திய பிறகே கைது நடவடிக்கைகள் இருக்கவேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி தீர்ப்பளித்தது.

இதற்கு தலித் அமைப்புகளிடம் இருந்து நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தலித், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச் செய்து விடும் என்று அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மத்திய அரசு, தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

இதன் மீதான விசாரணை நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நடந்து வருகிறது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தில் மாற்றம் செய்யவோ, அதில் துணை ஏற்பாடு செய்து உத்தரவிடவோ கோர்ட்டுகளுக்கு அதிகாரம் கிடையாது” என்று வாதிட்டார்.

அதற்கு, தாங்கள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்தி, நீதிபதிகள் கூறியதாவது:-

இந்திய அரசியலமைப்பு அட்டவணையின் 21-வது பிரிவில் ஒருவரின் வாழ்க்கை உரிமை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு தீர்ப்புகள் கூறப்பட்டு உள்ளது. 21-வது பிரிவை நாடாளுமன்றத்தாலும் கூட மறுக்க முடியாது. நமது அரசியல் சாசன சட்டமும் காரணமின்றி ஒருவர் கைது செய்யப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்கவில்லை.

ஒரு தரப்பின் கருத்தை மட்டுமே வைத்து ஒரு அப்பாவியை சிறையில் அடைக்கும் நாகரிகமற்ற சமுதாயத்தில் நாம் வாழவில்லை. மேலும் நியாயமான நடவடிக்கைகள் எதுவும் இன்றி ஒருவர் கைது செய்யப்படுவதை அடிப்படை உரிமைகளும் தடுக்கிறது. எனவே புகாரை முறையாக ஆய்வு செய்த பிறகே கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட் டது. அடுத்த கட்ட விசாரணையின்போது அனைத்து தரப்பினரின் கருத்துகளும் விரிவாக விசாரிக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

பின்னர், இந்த வழக்கை ஜூலை 2-ந்தேதிக்கு(கோடை விடுமுறைக்கு பிறகு) ஒத்திவைத்தனர்.  #SC #ST #Dailt
Tags:    

Similar News