செய்திகள்

ஓடும் ரெயிலில் பெண்ணை காப்பாற்றிய தமிழக ஆர்.பி.எப் வீரருக்கு பதக்கத்துடன் பரிசு

Published On 2018-05-10 22:26 GMT   |   Update On 2018-05-10 22:26 GMT
ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. #RPFConstable #Train
புதுடெல்லி:

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் 23ம் தேதி இரவு வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயிலில் சென்றார். அப்போது அந்த பெண்ணை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

அந்த பெண்ணின் அலறல் கேட்டு அதே பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர்  சிவாஜி அங்கு சென்றார். ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது துணிச்சல் மிக்க செயலுக்கு போலீசார் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், ஓடும் ரெயிலில் பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓடும் ரெயிலில் இளம் பெண்ணை காப்பாற்றிய சிவாஜியின் துணிவை ஊக்குவிக்கும் வகையில் ரெயில்வே அமைச்சர் பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ரெயில்வே ஐ ஜி பொன் மாணிக்கவேல் சிவாஜியின் துணிவை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RPFConstable #Train
Tags:    

Similar News