செய்திகள்

ராகுல் காந்தி பகல்கனவு காணுகிறார் - 2024 வரை பிரதமர் வேலை காலி இல்லை - பா.ஜ.க. கிண்டல்

Published On 2018-05-09 19:45 IST   |   Update On 2018-05-09 19:56:00 IST
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமராக பதவியேற்க தயார் என்று கூறிய ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் விதமாக 2024-ம் ஆண்டு வரை பிரதமர் வேலை காலி இல்லை என பா.ஜ.க. தெரிவித்துள்ளது. #PMvacancy #RahulGandhi #daydreaming
ஐதராபாத்:

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் வெற்றி பெற்றால் பிரதமராக பதவியேற்க தயார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்தார். கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் பதவி மோகத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு மாறாக மூத்த தலைவர்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு அவர் பிரதமராக ஆசைப்படுகிறார் என மோடி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் விதமாக, அவர் பகல்கனவு காண்பதாகவும், வரும் 2024-ம் ஆண்டு வரை பிரதமர் வேலை காலி இல்லை என பா.ஜ.க. இன்று தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக, ஐதராபாத் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான ஷாநவாஸ் ஹுசைன், பிரதமர் ஆகப்போவதாக ராகுல் காந்தி பகல்கனவு காண்கிறார். அவரது அழகான கனவுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியை மக்கள் தேர்வு செய்துள்ளனர். வரும் 2019-ம் தேர்தலிலும் மேலும் அதிகமான பெரும்பான்மை பலத்துடன் மோடிதான் பிரதமராக பதவியேற்பார். இது காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியும் என அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் துணை தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பிறகு 13 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடைந்ததாகவும், அவர் தலைவராக பதவி உயர்வு பெற்ற பின்னர் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளதாகவும், வரும் 12-ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆறாவது தோல்வியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  #PMvacancy #RahulGandhi #daydreaming 
Tags:    

Similar News