செய்திகள்

நீதிபதிகளுக்குள் தனிப்பட்ட விமர்சனம் கூடாது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து

Published On 2018-05-04 20:18 GMT   |   Update On 2018-05-04 20:18 GMT
ஒரு நீதிபதியை தனிப்பட்ட முறையில் மற்றொரு நீதிபதி விமர்சிக்கக்கூடாது என மேலூர் மாஜிஸ்திரேட்டு தாக்கல் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது.
புதுடெல்லி:

பி.ஆர்.பி. கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு மதுரை மேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள், ‘இந்த வழக்கில் தொடர்புடையவர் பெரும்புள்ளி என்பதால் மேலூர் கோர்ட்டில் விசாரித்த மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி அந்த பெரும்புள்ளிக்கு சாதகமாக செயல்பட்டு இருப்பதாக’ தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறு ஐகோர்ட்டு தீர்ப்பில் தன் மீது வைக்கப்பட்ட தனி நபர் விமர்சனத்தை நீக்கக்கோரி மேலூர் மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் அமர்வில் நடைபெற்றது. இதில் மனுதாரர் மகேந்திர பூபதி தரப்பில் மூத்த வக்கீல் நாகமுத்து ஆஜரானார்.

இந்த வழக்கின் விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், குறிப்பிட்ட வழக்கின் மீதான தீர்ப்பில் மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதிக்கு எதிரான மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளின் கருத்துக்களை நீக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

நீதிபதிகளுக்குள் தனிப்பட்ட விமர்சனம் கூடாது என குறிப்பிட்ட நீதிபதிகள், ஒரு நீதிபதி மீது குற்றம் சாட்டப்படும் போது உரிய ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அந்த நீதிபதி மீது தனிப்பட்ட விமர்சனங்களை வைக்கக்கூடாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.  #Tamilnews #Supremecourt
Tags:    

Similar News