செய்திகள்

பீகார் பஸ் விபத்தில் உயிரிழப்பு இல்லை - 27 பேர் இறந்ததாக வந்த தகவல் தவறு என்கிறார் மந்திரி

Published On 2018-05-04 08:13 GMT   |   Update On 2018-05-04 08:13 GMT
பீகார் மாநிலம் மோதிஹரியில் பேருந்து விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்த அமைச்சர், இப்போது ஒருவரும் உயிரிழக்கவில்லை என கூறியுள்ளார். #MotihariBusAccident
மோதிஹரி:

பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பாரன் மாவட்டம் மோதிஹரி என்ற பகுதியில் நேற்று ஒரு பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் அதில் பயணித்த 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்ததாகவும், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

27 பேர் இறந்திருப்பதை மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு துறை மந்திரி தினேஷ் சந்திர யாதவும் உறுதி செய்தார்.  பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



இந்நிலையில், இன்று மீண்டும் இந்த விபத்து குறித்து செய்தியாளர்களை சந்தித்த மந்திரி தினேஷ் சந்திர யாதவ், விபத்தில் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்றும், இறந்துவிட்டதாக வந்த தகவல் தவறு என்றும் கூறினார்.

‘உள்ளூர் மக்கள் சிலர் அளித்த தகவலின் அப்படையில் 27 பேர் உயிரிழந்துவிட்டதாக கூறினேன். ஆனால் இறுதிக்கட்ட அறிக்கை வந்தபிறகே உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தேன். இப்போது அந்த பேருந்தில் 13 பேர் மட்டுமே இருந்ததாக தகவல் வந்துள்ளது. அவர்களில் 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 பேர் இறந்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. அவர்கள் பேருந்தில் இருந்து வெளியேறி உயிர்தப்பியிருக்கலாம்’ என்று மந்திரி தினேஷ் கூறினார். #MotihariBusAccident
Tags:    

Similar News