செய்திகள்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு - சிபிஐ அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ஐகோர்ட்

Published On 2018-05-02 21:43 IST   |   Update On 2018-05-02 21:43:00 IST
உத்தரப்பிரதேசம் மாநில பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் கைதாகியுள்ள உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிஐ விசாரணையில் திருப்தி இல்லை என அலகாபாத் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. #UnnaoRapeCase
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதனை அடுத்து, அந்த பெண்ணின் தந்தை மர்மமான முறையில் போலீஸ் காவலில் உயிரிழந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

குல்தீப் சிங் செங்கார் சி.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்காவலில் உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அலகாபாத் ஐகோர்ட்டில் இன்று நடந்தது. சிபிஐ விசாரணையில் திருப்தி இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் சரியாக பதிவு செய்யப்படவில்லை என நீதிபதிகள் கண்டித்தனர். “வழக்கு விசாரணை செல்லும் கோணம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் கோர்ட் உத்தரவிட முடியாது. உங்களுக்கு (சிபிஐ) உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஏதாவது செய்யுங்கள். ஏன் கோர்ட் உத்தரவிட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் போது இது தொடர்பாக சிபிஐ பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். #UnnaoRapeCase

Similar News