செய்திகள்
தாயார் அனிதாவுடன் ரமேஷ் சென்னிதலாவின் மகன் ரமீத் சென்னிதலா.

கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மகனுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வில் 210-வது இடம்

Published On 2018-04-28 05:14 GMT   |   Update On 2018-04-28 05:14 GMT
கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மகனுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 210-வது இடம் கிடைத்துள்ளது. #RameshChennithala #RamitChennithal
திருவனந்தபுரம்:

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது.

985 பணிகளுக்கு கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு நடந்தது. இதில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நேற்று நேர்முகத்தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதிலும் இருந்து 990 பேர் தேர்வாகி இருந்தனர். இதில் தமிழகத்தில் இருந்து 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் கீர்த்திவாசன் முதலிடத்தை பிடித்தார்.

கேரளாவில் இருந்து 33 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களில் கேரள எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலாவின் மகன் ரமீத் சென்னிதலாவும் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவருக்கு அகில இந்திய அளவில் 210-வது இடம் கிடைத்துள்ளது. இதன் மூலம் ரமீத் சென்னிதலா ஐ.பி.எஸ். கேடரில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுபற்றி ரமேஷ் சென்னிதலா கூறும்போது, சிறு வயதில் இருந்தே மகனுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற கனவு இருந்தது. நான், அரசியல்வாதியாக இருந்ததால் மகனின் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் எனது மனைவிதான் மகனை கவனித்துக்கொண்டார். இப்போது அவர், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து ரமீத் சென்னிதலா கூறும் போது, பி.டெக் படித்து விட்டு பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றினேன். அதே நேரம் சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாரிப்பில் இருந்தேன். இப்போது 210-வது இடம் கிடைத்துள்ளது. இந்த பணியில் சேர்வேன். ஆனாலும் மீண்டும் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் முதல் 10-வது இடத்திற்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றார்.

ரமீத் சென்னிதலாவுக்கு அவரது தாயார் அனிதா சென்னிதலா வாழ்த்து தெரிவித்தார். #RameshChennithala #RamitChennithal
Tags:    

Similar News