செய்திகள்

திரிபுரா சட்டசபை தேர்தல்: முதல் மந்திரி மானிக் சர்க்கார் வேட்புமனு தாக்கல்

Published On 2018-01-29 13:43 GMT   |   Update On 2018-01-29 13:43 GMT
திரிபுரா மாநில சட்டசைபை தேர்தலில் பிப்ரவரி 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் முதல் மந்திரி மானிக் சர்க்கார் மற்றும் 4 மந்திரிகள் தங்களது தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். #Tripurapolls #CMManikSarkar
அகர்தலா:

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி முன்னணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையில் உள்ள 60 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், முதல் மந்திரி மானிக் சர்க்கார், சிபாய்ஜலா மாவட்டத்தில் உள்ள தன்பூர் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து 4 சட்டசபை தேர்தல்களில் இதே தொகுதியில் இவர் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத்துறை மந்திரி ஷாஹித் சவுத்ரி போக்ஸாநகர் தொகுதியிலும், கல்வித்துறை மந்திரி தபன் சக்ரபர்த்தி சாந்திபூர் தொகுதியிலும், வனத்துறை மந்திரி நரேஷ் ஜமாட்டியா பக்மா தொகுதியிலும், குடிநீர், வடிகால்துறை மந்திரி ரத்தன் பாவ்மிக் காக்ரபோன் தொகுதியிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களுடன் ஆளும் இடதுசாரி முன்னணியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களும் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 

60 தொகுதிகளிலும் பிப்ரவரி 18-ம் தேதி பதிவாகும் வாக்குகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews #Tripurapolls #CMManikSarkar 
Tags:    

Similar News