செய்திகள்

ஒக்கி புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு ரூ.133 கோடி இடைக்கால நிவாரண நிதி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவு

Published On 2017-12-27 11:41 GMT   |   Update On 2017-12-27 11:41 GMT
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு இடைக்கால நிவாரண நிதியாக 133 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

அரபிக்கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற பல மீனவர்கள் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காணாமல் போனதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ம் தேதி கன்னியாகுமரி வந்தார். அவரை தமிழக கவர்னர் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.


இதன் பின்னர், தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள் புயல் பாதிப்பை பிரதமரிடம் விளக்கினர். தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி கோரி பிரதமரிடம் கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார். அதில், புயல் நிவாரணமாக ரூ.4,047 கோடி ஒதுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட டெல்லியில் இருந்து அதிகாரிகள் குழு இன்று சென்னை வந்தடைந்தது. நாளை அவர்கள் கன்னியாகுமரிக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், ஒக்கி பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 133 கோடி ரூபாயை மத்திய அரசு இன்று ஒதுக்கியுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News