செய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனை சிறப்பு விருந்தில் பங்கேற்ற இவாங்கா, பிரதமர் மோடி

Published On 2017-11-28 18:02 GMT   |   Update On 2017-11-28 18:02 GMT
ஐதராபாத் நகரில் வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையின் பிரமாண்ட விருந்து மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு விருந்தில் இவாங்கா டிரம்ப மற்றும் பிரதமர் மோடி பங்கேற்றனர்.
ஐதராபாத்:

ஐதராபாத் நகரில் வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையின் பிரமாண்ட விருந்து மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு விருந்தில் இவாங்கா டிரம்ப மற்றும் பிரதமர் மோடி பங்கேற்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்றினார்.



அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வந்தார். இந்த மாநாட்டில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் உள்பட 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா டிரம்புக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.



இந்நிலையில், இன்று இரவு வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் அரசு சார்பில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்தில் பிரதமர் மோடி மற்றும் இவாங்கா டிரம்ப் ஆகியோர் பங்கேற்றனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 101 பேர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

மேலும், சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்ட 1,500 பேருக்கும், பிரமாண்ட விருந்து மண்டபத்தில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

முன்னதாக, ஐதராபாத்தில் மெட்ரொ ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News