செய்திகள்

பீகாரில் பூச்சிகொல்லி மருந்தில் டீ செய்த 10 வயது சிறுமி - 4 பேர் பலி

Published On 2017-11-02 16:28 IST   |   Update On 2017-11-02 16:28:00 IST
பீகாரில் பூச்சிக்கொல்லி மருந்தில் செய்த டீயை பருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலம் டார்பான்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பூச்சிக்கொல்லி மருந்தில் டீ செய்து பருகிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா என்ற 10-வயது சிறுமி வீட்டில் உள்ள அனைவருக்கும் டீ போட்டு கொடுத்துள்ளார்.



அதனை பருகியவுடன் வீட்டிலிருந்த அனைவரின் உடல்நிலையும் மிகவும் மோசமானது. துக்கான் மாடோ(60), ரான்ஸ்வரூப் மாடோ மற்றும் டீ செய்த சிறுமி அர்ச்சனா ஆகிய மூவரும் வீட்டிலேயே உயிரிழந்தனர். மீதி பேரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை சோதனை செய்த மருத்துவர்கள் பருகிய டீயில் விஷம் கலந்திருந்ததாக கூறினர்.

இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் பார்க்கையில் டீ தூளிற்கு பதிலாக பூச்சிக்கொல்லி கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி தவறுதலாக விஷம் கலந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் மாடோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரமிளா தேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுமி செய்த தவறினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Similar News